×

'பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை': பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேட்டி

கோவை: பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர், அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியுள்ளனர். அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைக்க தொடங்கியுள்ளது. பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதேபோல் தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில் கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அச்சமயம், பாஜகவின் தலைமை சரியில்லை என கூறி பல நிர்வாகிகள் அதிமுகவில் சேர்ந்து வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வானதி, மாற்று கட்சியில் இருந்து பலர் எங்கள் கட்சிக்கு வந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

சமீபத்தில் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார் ஒருசில காரணங்களை கூறி பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கலாம். பாஜக அனைத்து மாவட்டத்திலும் வேகமாக வளர்ந்து வருகிறது. இன்னும் பலர் பாஜகவில் இணைவார்கள். பாஜகவில் இருந்து ஒரு சிலர் விலகியதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறினார்.

Tags : Bajaka ,PA ,Avanathi Sainivasan , BJP, Party, BJP MLA Vanathi Srinivasan
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...